தலச்சிறப்பு |
பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று. மகாவிஷ்ணுவும், பிரம்ம தேவனும் தம்முள் 'யார் உயர்ந்தவர்' என்று சண்டையிட்டபோது, அவர்களுக்கு நடுவில் சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றினார். அதன் அடிமுடியினை கண்டு வருமாறு இருவரையும் பணித்தார். நான்முகன் அன்னபட்சி வடிவம் கொண்டு முடியைத் தேடியும், திருமால் வராக (பன்றி) வடிவம் கொண்டு அடியையும் தேடிச் சென்று காணமுடியாமல் நின்ற தலம். அருணம் என்றால் சிவப்பு (ஜோதி), அசலம் என்றால் மலை. அதுவே அருணாசலம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று சிறப்புப் பெற்ற பெரிய கோயில், பெரிய மூலவர், பெரிய அம்பிகை. இத்தலத்துப் பெருமாளை பார்வதி, விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், திருமகள், கலைமகள், இந்திரன், சந்திரன், அட்டதிக்கு பாலகர்கள், அட்டவசுக்கள், சப்த கன்னியர் போன்ற எண்ணற்றோர் வழிபட்டனர் என்று அருணாசலப் புராணம் கூறுகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவும், பௌர்ணமி கிரிவலமும் மிகவும் பிரசித்தி பெற்றது.
தித்திக்கும் திருப்புகழை உலகுக்கு அளித்த அருணகிரிநாதரின் அவதாரத் தலம். இங்கு இரண்டு முருகன் சன்னதிகள் உள்ளன. உலக மாயையில் சிக்கிய அருணகிரிநாதர் தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் பொருட்டு வள்ளாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கீழே குதித்தார். அவரை தமது திருக்கரத்தால் தாங்கி நயன தீட்சை, திருவடி தீட்சை அளித்து, அவரது நாவில் ஆறெழுத்தை எழுதி, 'முத்தைத்தரு' என்று அடியெடுத்துக் கொடுத்த கோபுரத்திளையனார் முருகன் சன்னதி ஒன்று.
மற்றொன்று கம்பத்திளையனார் முருகன் சன்னதி. அருணகிரிநாதர் மேல் பொறாமை கொண்டு, திருவண்ணாமலையை ஆண்டு வந்த 'பிரபுட தேவராயன்' மன்னனைத் தூண்டி, "யார் தமது உபாசனா மூர்த்தியை வரவழைக்கிறார்களோ அவர் மீது நீங்கள் அன்பு கொள்ள வேண்டும்" என்றார் சம்பந்தாண்டான். அந்த முயற்சியில் அவர் தோற்றுப் போக, அருணகிரிநாதர் திருப்புகழ் பாட, முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து கம்பத்தில் காட்சியளித்து மறைந்தார். அங்கு கம்பத்திளையனார் சன்னதி உள்ளது.
சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, குகை நமசிவாயர், குருநமசிவாயர், யோகி ராம் சுரத்குமார் சுவாமிகள் போன்ற பல தவசிரேஷ்டர்கள் வசித்த புண்ணிய பூமி. சேஷாத்திரி சுவாமிகள் ரமண மகரிஷியை உலகுக்கு அடையாளம் காட்டிய தலம். வள்ளிமலை சுவாமிகளை சேஷாத்திரி சுவாமிகள் ஆட்கொண்டு திருப்புகழின் பெருமையை உபதேசித்து வள்ளிமலைக்கு போகும்படி போதித்த தலம்.
சம்பந்தர் இரண்டு பதிகங்களும், அப்பர் 3 பதிகங்களும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தை 5 இடங்களில் குறிப்பிடுகின்றார். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை 79 திருப்புகழ் பாடல்களால் போற்றியுள்ளார். காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|